தஞ்சாவூர், ஏப்ரல் 9 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட கல்வித்துறை சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி தொடங்கி வைத்தார்.
பேரணி தஞ்சாவூர் ரயிலடி யிலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் நிறைவு அடைந்தது. இந்தப் பேரணியில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது ஜனநாயக கடமை உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்தி பேரணியில் சென்றனர்.
இதில் ஜூனியர் ரெட் கிராஸ், சாரண சாரணியர், தேசிய பசுமை படை, நாட்டு நல பணி திட்டம், தேசிய மாணவர் படை போன்ற அமைப்புகளை சேர்ந்த சுமார் 600க்கும் மேற்ப்பட்டவர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் தஞ்சாவூர் தொடக்க கல்வி அலுவலர் அய்யா கண்ணு, திருச்சி மண்டல பொறுப்பாளரும், தஞ்சாவூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பாளருமான பிச்சைமணி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் செல்வி, சாரண சாரணியர் மாவட்ட செயலாளர் சந்திரமௌலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



