சென்னை, செப். 25 –
தமிழ்நாட்டின் தொழில் முனைவோர் இயக்கத்தில் ஸ்டார்ட்அப் சிங்கம் ஒரு “கேம் சேஞ்சர்” ஆக உருவெடுத்துள்ள நிலையில் மாநிலத்தின் முதல் பிரதான ஸ்டார்ட்அப் ரியாலிட்டி ஷோவை உருவாக்கிய பான்ஹெம் வென்ச்சர்ஸ் இன்று தனது 2வது நிதியமைப்பு சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக அறிவித்தது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த உலகளாவிய தொழில் முனைவோர்களை ஆலோசகர்களும் முதலீட்டாளர்களுமாக இணைத்துள்ளனர்.
ஆரம்ப முதலீட்டாளரும் தலைமை வழிகாட்டியாக செயல்படும் குமார் வேம்புவுடன் டி.வி.எஸ் கேப்பிட்டல் ஃபண்ட்ஸ் நிறுவத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கோபால் ஸ்ரீனிவாசன், ஃபிரஷ் ஒர்க்ஸ் நிறுவனரும் செயல் தலைவருமான கிரிஷ் மாத்ருபூதம் , காரட் லேன் நிறுவனர் மிதுன் சச்சேதி, டி.எஸ்.எம் குழுமத்தின் இயக்குநர் கே. மகாலிங்கம், இப்போ பே தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான மோகன் கருப்பையா, ஐ தாட் ஃபைனான்சியல் கன்சல்ட்டிங் எல்.எல்.பி நிறுவனர் ஷ்யாம் சேகர், மேட் ஸ்ட்ரிட் டென் நிறுவனர் அஸ்வினி அசோகன், எம்2 பி ஃபின்டெக்
இயக்குநர் மதுசூதனன் ரங்கராஜன் உள்ளிட்டோர் ஸ்டார்ட் அப் சிங்கம் மூலமாக ஒன்றிணைந்துள்ளனர்.
தலைமை வழிகாட்டியாக செயல்படும் குமார் வேம்பு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பான்ஹெம் வென்ச்சர்ஸ் ஸ்டார்ட்அப் சிங்கத்தை ஒரு சாதாரண ரியாலிட்டி ஷோவாக மட்டுமல்லாமல் புதுமை, தொழில் முனைவுத்துவம் மற்றும் தமிழ்நாட்டின் டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்குகள் ஒருங்கிணையும் தளமாகவும் உருவாக்கி வருகிறது. சீசன் 1 இல் ஸ்டார்ட்அப் சிங்கம் தமிழ்நாட்டின் தொழில் முனைவு களத்தில் முன்னெப்போதும் இல்லாத மாற்றத்தை ஏற்படுத்தியது. 35 ஸ்டார்ட்அப்புகள் ₹40 கோடி மதிப்பிலான முதலீட்டு உறுதிமொழிகளை பெற்றன. அதில் 15 ஸ்டார்ட்அப்புகள் ஏற்கனவே ₹13 கோடி நிதியைப் பெற்றுள்ளன. இவ்வமைப்புகள் பெற்ற அடையாளம், அவர்களுக்கு விரைவான விற்பனை, வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்ளல், போன்ற வேகமான வளர்ச்சியை வழங்கியது.
அக்ரிடெக், ஹெல்த்டெக், டீ2 சி துறைகளில் உள்ள நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கி ஆயிரக்கணக்கானவர்களை தொழில் முனைவோராக மாற்றியிருக்கின்றன.
சீசன் 2 இல் ஸ்டார்ட் அப் சிங்கம் உயர்ந்த இலக்குடன் வருகிறது. மேலும் முதலீட்டாளர்களிடம் ₹100 கோடி முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது. நாடு முழுவதும் வந்த 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து 75 ஸ்டார்ட்அப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், பல உலகளாவிய முதலீட்டாளர்களும் பங்கு வகிக்க உள்ளனர் என்றார்.



