திருச்சி, ஜூலை 24 –
திருவெறும்பூர் அடுத்துள்ள துவாக்குடி அருகே மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் தேசிய தொழில்நுட்ப கழகம் (என்ஐடி) இயங்கி வருகிறது. அங்கு வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து 7,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த கல்லூரியில் தயாரிப்பு பொறியியல் (புரொடக் ஷன் இன்ஜினியரிங்) துறையில் பேராசிரியராக ஜெரால்டு (50) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் என்.ஐ.டி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கும், அதே கல்லூரியில் சக பேராசிரியையாக பணியாற்றும் பேராசிரியை ஒருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணத்திற்கு மீறிய பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது வீடியோ மற்றும் புகைப்படங்களை ஜெரால்டு தனது செல்போனில் எடுத்து வைத்திருந்தார்.
கடந்தாண்டு இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால், பேராசிரியை பேராசிரியருடன் நெருங்கி பழகுவதை தவிர்த்து வந்தார். இதனிடையே, கடந்த வாரம் இருவருக்கும் இடையே பெரும் மோதல் வெடித்ததாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஜெரால்டு, அந்தப் பேராசிரியைக்கு இ-மெயில் மூலம் ஆபாச செய்தியை அனுப்பியுள்ளார். இதேபோல் பேராசிரியையின் கணவர் மற்றும் சில மாணவர்களின் செல்போன்களுக்கு இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ, புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த பேராசிரியை, திருச்சி சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார் கடந்த 4 நாள்களுக்கு முன்பு ஜெரால்டு மீது வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் வேண்டும் என்றே பலருக்கும் ஜெரால்டு மெசேஜ் அனுப்பியதை ஒத்துக் கொண்டதால் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அம்பிகா தலைமையிலான போலீசார் ஜெரால்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



