கிருஷ்ணகிரி, ஆக. 29 –
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, பேருந்து நிலையம் அருகில் உள்ள பழுதடைந்த உயர்மட்ட மேம்பாலம் சீரமைப்பு பணிகள், ஓசூர்-பாகலூர் சாலையில் GRT முதல் ஒசூர் மாநகராட்சி அலுவலகம் வரையில் சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: ஒசூர் மாநகராட்சி, பேருந்து நிலையம் அருகில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தில் 21.06.2025 அன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக விரிசல் ஏற்பட்டது. இதனால் இப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தொடர்ந்து மேம்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் விரிசல் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சிறப்பு நிபுணர் குழு ஆய்வு செய்து உயர்மட்ட மேம்பாலத்தில் பழுதான பழைய பேரிங்குகளை அகற்றிவிட்டு புதிய பேரிங்குகள் பொருத்தும் பணி நடைபெற்ற வருகிறது. பழுது நீக்க பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஓசூர்-பாகலூர் சாலையில் GRT முதல் ஓசூர் மாநகராட்சி அலுவலகம் வரையில் 2 கி.மீ. தூரத்திற்கு சாலைப்பணியானது ரூ.12 கோடியே 80 இலட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில் நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இச்சாலையில் சிறுபாலங்கள், சாலையோர வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளது. இச்சாலை விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. தங்கதுரை, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் முகம்மது ஷபீர் ஆலம் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சங்கர், அக்ஷய் அனில் வாகாரே, தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர் ரமேஷ், தேசிய நெடுஞ்சாலையை உதவிக் கோட்டப் பொறியாளர் சே.வே. பத்மாவதி, உதவிப் பொறியாளர் ச. நிவேதா, ஓசூர் வட்டாட்சியர் கு. குணசிவா, காவல் ஆய்வாளர்கள் முத்தமிழ் செல்வன், நாகராஜ் மற்றும் காவல்துறை, போக்குவரத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.



