தருமபுரி, ஜூலை 13 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ள நிலையில் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தினசரி ஒவ்வொரு தெருவிலும் வீடுகளுக்கே சென்று தூய்மை பணியாளர்கள் குப்பைகளை பெற்று திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை இரண்டு பகுதிகளாக மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரிக்கவேண்டும்.
ஆனால் பாலக்கோடு பேரூராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட பை-பாஸ் ரோடு அருகே பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கடைகளில் சேகரிக்கப்படும் கோழி கழிவுகள் அனைத்தும் சாலை ஓரத்திலேயே கொட்டப்படுவதால் குப்பைகள் சாலைகளில் பறந்து வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறை ஏற்படுத்துகிறது. மேலும் கோழி கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றத்தால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.
அதிகாரிகளின் அலட்சியத்தால் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் மழை போல் தேங்கியுள்ளதாகவும் இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் அதிகாரிகள் மெத்தனப் போக்காக செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



