விழுப்புரம், ஜூலை 23 –
விழுப்புரம் நகராட்சி பகுதியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் இயங்கி வரும் உழவர் சந்தையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், விழுப்புரம் நகராட்சி பகுதியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் விழுப்புரம் உழவர் சந்தை 48 கடைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தைக்கு விழுப்புரம் பகுதியினைச் சுற்றியுள்ள பானாம்பட்டு, அர்பிசம்பாளையம், விராட்டிக்குப்பம், காங்கேயனூர், அய்யங்கோவில்பட்டு, காகுப்பம், பொய்யப்பாக்கம் ஆகிய பகுதிளிலிருந்து நாள்தோறும் சுமார் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த கத்தரி, அவரை, சுரைக்காய், கொத்தவரங்காய், பச்சமிளகாய், சின்னவெங்காயம், தேங்காய், கீரைவகைகள், தக்காளி, வெள்ளரி உள்ளிட்ட விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். மேலும், விழுப்புரம் உழவர் சந்தையின் மூலம் நாள்தோறும் 1800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விவசாயிகளின் விளைபொருட்களை வாங்கிச்சென்று பயனடைந்து வருகின்றனர்.
அதனடிப்படையில் இன்றைய தினம் விழுப்புரம் நகராட்சி பகுதியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் இயங்கி வரும் உழவர் சந்தையினை நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், விவசாயிகளிடம் உழவர் சந்தையின் மூலம் தாங்கள் பயனடைந்து வருவது குறித்து அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும், உழவர் சந்தைக்கு வருகை தந்த பொதுமக்களிடம் நிர்ணயிக்கப்பட்ட விலையில் காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்டவைகள் கிடைக்கப்பெறுகிறதா என்பது குறித்து கேட்டறியப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக். அப்துல் ரஹ்மான் அவர்கள் தெரிவித்தார்.
ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சுமதி, வேளாண் அலுவலர் (உழவர் சந்தை) த. அருண்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.