சில்வார்பட்டி அரசு மாதிரி பள்ளி மாணவிகள் முதலிடம்; மாநில போட்டிக்கு தகுதி
பெரியகுளம், செப். 11-
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை 2026-க்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்காக தடகளம், கபடி, கோகோ, கால்பந்து, சிலம்பம், கூடைப்பந்து, நீச்சல், ஓட்டப்பந்தயம், வளைகோல் பந்து, செஸ், கேரம், கிரிக்கெட், வாலிபால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் நடைபெற்ற கபடி போட்டியில் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பாக விளையாடி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றனர். போட்டி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாணவிகள், இறுதிப்போட்டியிலும் ஒருங்கிணைந்த செயல்பாட்டுடன் விளையாடி வெற்றி பெற்றனர். இதன் மூலம் மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஜமின்தார் ஆகியோரை தலைமை ஆசிரியர் பாண்டியன், உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டி, மாநில போட்டியிலும் சிறப்பாக விளையாடி பள்ளிக்கும் தேனி மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்து தெரிவித்தனர்.



