திருப்பூர், ஆக.28.
திருப்பூரில் குப்பை பிரச்னைக்கு அறிவியல் பூர்வமான நிரந்தரத் தீர்வு காண வேண்டும்; போராடும் பொதுமக்களை கைது செய்யும் போலீசாரின் நடவடிக்கையை கைவிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் வலியுறுத்தினார்.
திருப்பூர் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் எம்.பி. சுப்பராயன் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சிபிஐ, சிபிஎம், திமுக, காங்கிரஸ், பாஜக, கொமதேக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பராயன், வளர்ந்து வரும் தொழில் நகரமான திருப்பூரில் தினமும் சுமார் 630 முதல் 650 டன் வரை குப்பைகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் தேங்குவதாக தெரிவித்தார்.
குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் மற்றும் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளதாக அவர் கூறினார். குப்பை பிரச்னைக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் மீது போலீசார் கடுமையாக நடந்து கொள்வதை கண்டித்த அவர், அடக்குமுறையை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், அறிவியல் பூர்வமான திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி, அனைத்துக் கட்சிகள் சார்பில் முதலமைச்சருக்கு விரிவான மனு அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார். இரு தினங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து அடுத்தகட்டப் போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என எச்சரித்தார்.



