தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டப் போட்டியை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் வகையில், முதன்முறையாக சாப்ட்வேர் தொழில் நுட்பம் மற்றும் நவீன பாதுகாப்பு உபகரணங்களுடன் மண்டல அளவிலான சிலம்பப் போட்டி திருப்பூரில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாட்டு உலக சிலம்ப சம்மேளனத்தின் மாநில செயலாளரும், டீம் ஷாடோகாய் மார்ஷல் ஆர்ட்ஸ் அகடமியின் இயக்குனருமான கௌதம் ரகுநாதன் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் முதன்முறையாக உள் மண்டல அளவிலான சிலம்பப் போட்டி திருப்பூர் மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் தொழில்நுட்ப முன்னேற்றமாக, சாப்ட்வேர் ஸ்கோரிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மேலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தலைக்கவசம் உடல்கவசம் மற்றும் சிலம்பக் குச்சிகளுக்கான பாதுகாப்பு உறை உள்ளிட்ட அனைத்து நவீன பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இந்த போட்டி வருகிற செப்டம்பர் மாதம் 13-ந் தேதி திருப்பூர் எஸ்.கே.எல். பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. சப்-ஜூனியர், கேடட் மற்றும் ஜூனியர் ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
நமது பாரம்பரிய சிலம்பக் கலையை உலக அளவில் கொண்டு சென்று, பிற நாட்டு மக்களும் கற்கும் வகையில் மேம்படுத்துவதே எங்களது நோக்கம் ஆகும். சிலம்பக் கலையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் இந்த முயற்சிக்கு தமிழ்நாடு அரசு உரிய ஆதரவு அளிக்க வேண்டும்.



