ஈரோடு, ஜூலை 18 –
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழக அரசு குட்கா, பான்மசலா போன்ற புகையிலைப்பொருட்கள் தடை செய்துள்ளது. காவல்துறை, உணவு பாதுகாப்புத்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பள்ளி, கல்லூரி அருகாமையில் உள்ள கடைகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு இத்தடையினை மீறி விற்பனையில் ஈடுபடும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஜீன் வரை தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த 279 கடைகள் மூடப்பட்டு ரூ.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு 551.83 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட அளவிலான அழிப்புக்குழு மூலம் குப்பைக் கிடங்கில் அழிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் முதன் முறை குற்றத்திற்கு ரூ.25000 அபராதமும் 15 நாட்கள் உணவு வணிக நிறுவனம் மூடப்பட்டும், அதே உணவு வணிகர் 2-ம் முறை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் ரூ.50,000 அபராதமும் 30 நாட்கள் உணவு வணிக நிறுவனம் மூடி வைக்கப்பட்டும், அதே உணவு வணிகர் தொடர்ந்து 3வது முறை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பதோடு 90 நாட்களும் உணவு வணிக நிறுவனம் மூடப்பட்டு சம்பந்தப்பட்டஉணவு வணிகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் தொழில் உரிமம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டு அபராதம் விதிப்பு நடவடிக்கைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டின் கலந்த உணவுப்பொருட்களை விற்பனை செய்ததற்காக எவருக்கெதிரேனும் காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருந்தால் வியாபாரத்திற்கு எதிராக தடையாணைப் பெற்று வணிகத்தை நிறுத்துவது, அபராதம் விதிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்கள் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப்பொருட்களை விற்பனை செய்வது குறித்து புகார்களை 0424 2223545 மற்றும் 94440 42322 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். அவ்வாறு புகார் அளிக்கும் நுகர்வோர்களின் விபரம் ரகசியமாக வைக்கப்படும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


