சிவகங்கை, ஆக. 15 –
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் பின்னர் சமாதானத்தை விளக்கும் வகையில் வெண்புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டார். அதனைத்தொடர்ந்து காவல்துறை, ஊர்க்காவல்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூபாய் 6,359/- வீதம் மொத்தம் ரூபாய் 12,718/- மதிப்பீட்டிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு தலா ரூபாய் 25,000/- வீதம் மொத்தம் ரூபாய் 75,000/- மதிப்பீட்டிலான தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகைக்கான ஆணையினையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 1 பயனாளிக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-2026ன் கீழ் ரூபாய் 1,25,000/- மதிப்பீட்டில் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான ஆணையினையும், 4 பயனாளிகளுக்கு தலா ரூபாய் 52,500/- மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைப்பதற்கான ஆணையினையும் என ஆக மொத்தம் 10 பயனாளிகளுக்கு ரூபாய் 4,22,718/- மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, வழங்கினார்.
மேலும், 70 காவல்துறையைச் சார்ந்த காவலர்களுக்கும், வருவாய்த்துறை மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 300 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நற்சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் ரூபாய் 2 இலட்சம் மதிப்பீட்டிலான பரிசுத்தொகையினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பின்னர், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பாட்டம், யோகா மற்றும் கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. சிவ பிரசாத், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ். செல்வசுரபி , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மரு.ஜி. அரவிந்த், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மு. முத்துகழுவன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார் மற்றும் அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.



