தென்தாமரைகுளம், பிப். 9 –
குமரி மாவட்டத்தில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மணக்குடி பகுதியில் தெருநாய் ஒன்று குழந்தைகள் உள்பட 13 பேரை விரட்டி விரட்டி கடித்து குதறியது. இதையடுத்து அனைத்து கிராம பகுதிகளிலும் தெருநாய்களை பிடித்து கருத்தடை ஊசி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. கிராம ஊராட்சி சார்பில் அந்தந்த ஊராட்சி பகுதிகளில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதையடுத்து சாமிதோப்பு, கரும்பாட்டூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக விருதுநகரில் இருந்து ஒரு குழுவினர் வந்திருந்தனர், அவர்கள் தெருக்களில் சுற்றித்திரிந்த நாய்களை வளைவிரித்து
பிடித்தனர். பிடிபட்ட நாய்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 30 நாய்கள் சிக்கியது. அந்த நாய்களுக்கு டாக்டர் குழுவினர் தடுப்பு ஊசி செலுத்தினர்.



