நாகர்கோவில், செப். 11 –
குமரி மாவட்ட ஆட்சியர் விவசாய குறைதீர் கூட்டத்தை புறக்கணித்தது தொடர்பாக விவசாயிகள் பல்வேறு நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பொது பிரச்சனைகள் குறித்து மறு ஆய்வு கூட்டம் நடத்த கோரிக்கை விடுத்து இருந்தனர். மறு ஆய்வு கூட்டம் நடத்துவதற்காக ஏற்கனவே முன் தயாரிப்பு கூட்டத்தில் பெறப்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட தீர்க்கப்படாமல் நீண்டகால பொது பிரச்சனைகள் குறித்து மறு ஆய்வு கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகளும் தயார் செய்யப்பட்டது.
நீண்டகால பொது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சட்டமன்ற பேரவை உறுதி குழு தலைவர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர்களை பாசன துறை சேர்மன் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர்கள் தாணு பிள்ளை, முருகேச பிள்ளை, அருள், செண்பக சேகர பிள்ளை, விஜி, தேவதாஸ், இராதாகிருஷ்ணன், ரவீந்திரன், ஏசுதாஸ், மனோகரன், சுனில், தங்கப்பன், தங்கபெருமாள் உட்பட விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் விவசாயிகள் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவர் வேல் முருகன் மற்றும் உறுப்பினர்கள் இந்த பிரச்சனையை தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் கொண்டு சென்று விவாதித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.



