நாகர்கோவில், அக். 29 –
திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நெரிசலைக் குறைக்கவும், தென் தமிழகத்துக்கான ரயில் இணைப்பை மேம்படுத்தவும், திருவனந்தபுரத்தில் இருந்து நேமம் வரையிலான ரயில் பாதையில் ‘டுவின் சிங்கிள் லைன்’ அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டம், கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இரட்டைப் பாதை திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும்.
வழக்கமான இரட்டைப் பாதையில், ஒரு திசையில் மட்டுமே ஒரு பாதை ரயில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ‘டுவின் சிங்கிள் லைன்’ முறையில், இரண்டு பாதைகளும் இரு திசைகளிலும் ரயில்களை இயக்க அனுமதிக்கின்றன.
இந்த நெகிழ்வுத்தன்மை, ஒரு பாதையில் பராமரிப்புப் பணி நடக்கும்போது அல்லது விபத்து போன்ற அவசர காலங்களில் மற்றொரு பாதையைப் பயன்படுத்தி ரயில்களை இயக்க உதவுகிறது. இது போக்குவரத்துத் தடையைக் குறைத்து, ரயில் இயக்கத்தின் வேகத்தை அதிகரிக்க உதவும். இத்திட்டத்தின் முதல் கட்டப் பணிகள், நேமத்தில் ரூ.117 கோடி மதிப்பீட்டில் ரயில்வேக்குச் சொந்தமான நிலத்தில் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டம் முழுமையாக முடிவடையும்போது, நேமம் துணை முனையம் முழுமையாகச் செயல்படத் தொடங்கும். கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதையில் ‘டுவின் சிங்கிள் லைன்’ அமைப்பு ஏற்படுத்தப்படுவதால் குமரி வரும் ரயில்களுக்கு வேகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


