கன்னியாகுமரி, ஆக. 20 –
அஞ்சுகிராமத்தில் பணி ஓய்வு பெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளருக்கு அனைத்து கட்சி சார்ந்த பிரமுகர்களும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட கனகப்பரத்தைச் சேர்ந்தவர் பொன். மனாபவரா (60). இவர் 1988 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி மத்திய தொழில் பாதுகாப்பு படையில் கான்பூரில் தனது பணியை தொடங்கினார்.
கடந்த 38 வருடங்களாக இந்தியாவில் பல தொழிற்ச் சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்களில் என பல்வேறு இடங்களில் பணியாற்றினார். பின்னர் மதுரை விமான நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கடந்த ஜுலை மாதம் 31-ம் தேதி தன் பணியை நிறைவு செய்து பணி ஓய்வு பெற்றுள்ளார்.
பணி செய்து ஓய்வு பெற்ற பொன். மனாபவராவுக்கு கனகப்பபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் நீதிபதி பெ. ஜெயராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் அக்ரி அதிகாரி அ. விஜயகுமார் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் பொன். வரதராஜா அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ். ஜெஸீம், அஞ்சுகிராமம் பேரூர் திமுக செயலாளர் இளங்கோ, அஞ்சுகிராமம் அதிமுக பேரூர் செயலாளர் ராஜபாண்டியன், தங்கப்பாண்டியன் ஆசிரியர், அஞ்சுகிராமம் பேரூராட்சித் துணைத் தலைவர் காந்தி, கவுன்சிலர் வீடியோகுமார், முன்னாள் கவுன்சிலர் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் ஆன்மீகப் பெரியோர்கள், அரசுத்துறை அதிகாரிகள், அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவின் நாயகன் பொன். மனாபவராவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்தனர்.



