நாகர்கோவில், ஜூலை 14 –
விழிஞ்ஞம் அதானி சரக்குப்பெட்டக மாற்றுமுனைய துறைமுகத்திலிருந்து சரக்குகளுடன் சென்ற கப்பல் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தினால் கடலும் ஒட்டுமொத்த தமிழ்நாடு கடற்கரையும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. 643 கண்டெய்னர்களுடன் கவிழ்ந்த கப்பலில் ஆபத்தான ரசாயன பொருள்கள் இருந்ததாக கப்பல் நிறுவனம் சொல்கிறது. அதில் சில கன்டெய்னர்கள் கரை ஒதுங்கியதில் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் கழிவுப் பொருள்கள் கரை ஒதுங்கியது. ஆபத்தான ரசாயனங்கள் நிறைந்த கண்டெய்னர்கள் இன்னும் கரை ஒதுங்காததால் அது கடலுக்குள் வேதியியல் மாற்றங்களை உருவாக்கி கடலையும் கடல்வாழ் உயிரினங்களையும் கடலோடிகளையும் பாதிப்புகளுக்கு உள்ளாக்கும். இதன் பாதிப்புகள் இன்னொரு தலைமுறை வரை தொடரும் என்று கடல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரும் இந்த கழிவுகள் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை கரை ஒதுங்கிக்கொண்டே இருக்கும் என்கிறார்.
இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமனாதபுரம் மக்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். கப்பல் விபத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையை லைபீரிய கப்பல் கம்பெனி, அதானி துறைமுக பொறுப்புக்கழகம், கேரள அரசு மற்றும் ஒன்றிய அரசிடமிருந்து பெற்று வழங்க தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், தமிழ்நாடு அரசு இது சம்பந்தமாக இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. கேரள அரசின் கடலோர காவல் குழுமம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகக் கூறி கப்பல் கம்பெனி மீது FIR பதிவு செய்துள்ளது. தமிழக அரசு கடலோர காவல் குழுமம் ஒரு வழக்கு கூட இதுவரை பதிவு செய்யவில்லை.
லைபீரிய கப்பல் ஒன்றை கேரள மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கேட்டு கேரள அரசு சிறைபிடித்துள்ளதாக தகவல் வருகிறது. கப்பலை சிறைபிடித்து கேரள மக்களுக்கு 9000 கோடி இழப்பீடு கேட்கிறது கேரள அரசு. இன்னும் ஒரு தலைமுறைக்கு பாதிப்பை ஏற்படுத்தப்போகும் இந்த விபத்தின் மூலம் இழப்பீடு பெற்றுக்கொடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது. தமிழக மக்களின் மனசாட்சியாக இருக்கும் முதல்வர் இந்த பேரழிவை சந்திக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அவசரமாக நடவடிக்கை எடுத்து மக்களுக்கு இழப்பீடு பெற்று தர வேண்டுமென நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் கோரிக்கை விடுத்துள்ளார்.



