நாகர்கோவில், அக்டோபர் 23 –
குமரி மாவட்டம் விளவங்கோட்டை அடுத்த மூலதட்டு விளை பகுதியை சேர்ந்தவர் மேரி கில்டர் (48). இவர் நேற்று தன் மகளை ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கண் சிகிச்சைக்காக அழைத்து வந்தார். மகள் சிகிச்சைக்காக சென்றபோது மகளின் ஒரு வயது குழந்தையை மேரி கில்டர் கையில் வைத்துக்கொண்டு வெளியே காத்திருந்தார். அப்போது குழந்தையை அருகில் இருந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு மேரி கில்டர் கழிவறைக்கு சென்றார். பின்னர் மீண்டும் வந்து குழந்தையை மேரி கில்டர் வாங்கிக்கொண்டார்.
சிறிது நேரம் கடந்த பிறகு குழந்தையின் கையை பார்த்துள்ளார். கையில் இருந்த இரண்டு கிராம் தங்கக்காப்பு மாயமாய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அப்பகுதியில் தேடி உள்ளார். தங்க காப்பு கிடைக்கவில்லை. இது குறித்து மேரி கில்டர் ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை பெண்ணிடம் கொடுத்து சென்ற போது அந்த பெண் காப்பை கழட்டி சென்றாரா? காப்பு குழந்தையின் கையில் இருந்து நழுவி கீழே விழுந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


