நாகர்கோவில், ஜூன் 11 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டார், தக்கலை மற்றும் குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் புலனாய்வில் ஈடுபட்டனர்.
இந்த விசாரணையில் தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த பிரவின் ராஜ் (28) என்பவர் பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களை திருடியது தெரிய வந்தது. திருடப்பட்ட வாகனங்களை பொன்மனை பகுதியை சேர்ந்த ஜெர்லின் (18) மற்றும் அருமை நல்லூர் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் (48) ஆகியோரிடம் பிரபின் ராஜ ஒப்படைத்துள்ளார்.
கிழக்கம்பாகம் பகுதியில் கிறிஸ்டோபர் ஒரு பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வந்துள்ளார். இந்த கடையை மறைமுகமாக திருட்டு வாகனங்களை பிரிக்கும் மையமாக அவர்கள் பயன்படுத்தி வந்தனர். திருடப்பட்ட வாகனங்களை இந்த கடைக்கு கொண்டு வந்து பாகங்களாக பிரித்து, எடைக்கு விற்பனை செய்துள்ளனர். மேலும் சில வாகனங்களை போலி ஆவணங்கள் மூலம் பிற நபர்களுக்கு விற்பனை செய்து லாபம் சம்பாதித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய விபின் ராஜ், ஜெர்லின் மற்றும் கிறிஸ்டோபர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த கும்பல் மீது திருவட்டார் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


