தருமபுரி, மே 27 –
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தேக்கல் நாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் விவசாயி இவர் தனது தோட்டத்தில் மாடு மற்றும் கன்றுகளை மேய்ச்சலுக்காக கட்டியிருந்தார். அப்போது அங்குள்ள கிணற்றில் மாடு ஒன்று தவறி விழுந்தது.
இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பிரகாசம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றிலிருந்து மாட்டை உயிருடன் மீட்டனர்.
இதே போல் புளியம்பட்டியில் சக்தி என்பவரின் கிணற்றில் விழுந்த மாட்டை தீயணைப்பு படையினர் மீட்டனர். இது போன்று மணியம்பாடி கிராமத்தில் அதியமான் என்பவரின் கிணற்றில் மயில் தவறி விழுந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மயிலை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


