களியக்காவிளை, மே 9 –
கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை அருகே அதங்கோட்டில் தனியார் நடத்தும் முகில் சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 300 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்த கல்லூரியில் 2025-26 கல்வி ஆண்டில் 120 மாணவர்கள் சேர்ந்து கல்வி கற்று வந்தனர். இவர்களில் 60 மாணவர்களுக்கு பல்கலை கழக தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. முறையான அங்கீகாரம் அளிக்காத காரணத்தால் செமஸ்டர் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இன்று செமஸ்டர் தேர்வு தொடங்கிய நிலையில் தேர்வு எழுத முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது. நீதிமன்றம் மற்றும் அம்பேத்கர் பல்கலை கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் குவித்து பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.



