கன்னியாகுமரி, ஏப். 29 –
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் பிலிப். இவருக்கு எலிசபத் பிலிப், ஆனி பிலிப் (35), மீரா பிலிப் (32) என்ற 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் எலிசபெத் பிலிப் திருமணம் ஆகி லண்டனில் வசித்து வருகிறார். ஆனி பிலிப் எக்ஸ்ரே டெக்னீசியன் படித்துள்ளார். மீரா பிலிப் இன்ஜினியரிங் முடித்துள்ளார். இவர்கள் இருவரும் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவிற்கு வருவது வழக்கம். இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவுக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். இதை அடுத்து அவர்கள் ஒவ்வொரு சுற்றுலா தலங்களில் சென்று விட்டு கடைசியாக கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். சம்பவத்தன்று ஓட்டல் அறையில் இருந்து அக்கா, தங்கை இருவரும் வெளியில் சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் பின்னர் ஓட்டலுக்கு திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டல் ஊழியர்கள் இளம் பெண்களின் தாயாருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். மேலும் ஓட்டல் ஊழியர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து பிலிப்பின் அண்ணன் ஷிஜூ என்பவர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கேரள மாநிலத்தை சேர்ந்த 2 இளம் பெண்களை தேடி வருகின்றனர்.



