கிருஷ்ணகிரி, ஜூன் 10 –
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே கோடிபுதூர் தென் பெண்ணை ஆற்றங்கரையில், பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் 116 ஆம் ஆண்டு திருவிழா ஒருவாரமாக விக்ரம் ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று 4ம் நாள் ஸ்ரீபத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து, கோயில் முன் சுமார் 10 அடி உயரத்தில் 5 பரணைகள் அமைக்கப்பட்டது. இதில் 4 பரண்களில் ஆடுகளையும், 1 பரணில் பன்றியையும் கட்டி வைத்திருந்தனர். அப்போது, அருள் வந்து ஆடிய பூசாரி, பரண் மீது ஏறி பன்றி மற்றும் ஆடு வயிற்றை கிழித்து, அதில் வாழைப்பழத்தை போட்டு பிசைந்து ரத்தச்சோறு சாப்பிட்டார். பின்னர், பரண் மீது இருந்தவாறு ரத்தம் கலந்த சாதத்தை பக்தர்கள் கூட்டத்தை நோக்கி அள்ளி வீசினார். அதனை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் மடியேந்தி பிடித்து வாங்கி சாப்பிட்டனர்.
குழந்தை இல்லாத தம்பதிகள், இவ்வாறு இரத்தச்சோறு சாப்பிட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால், இதனை வாங்குவதற்காக ஏராளமான பக்தர்கள் முண்டியடித்தனர். அதை தொடர்ந்து 2 ஆயிரத் திற்கும் மேற்பட்ட ஆடுகளும், 50க்கும் மேற்பட்ட பன்றிகளும் பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.
இந்த விழாவில், சேலம் மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், போச்சம்பள்ளி, மத்தூர், காவேரிப்பட்டணம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, பாண்டிசேரியிலிருந்தும் 20 ஆயிரத்திற்கும் மேற் பட்டபக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும், பலியிட்ட ஆடு, பன்றிகளை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விருந்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை கோவில் தர்மகத்தாக்கள் முருகன், டாக்டர் மணிமாறன் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஏற்பாடு செய்திருந்தனர்.



