நாகர்கோவில், ஜூலை 11 –
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் கன்னியாகுமரி நகராட்சிக்குட்பட்ட சுவாமிநாதபுரம் பகுதியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான மதி அனுபவ அங்காடி திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்தார். கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் முன்னிலை வகித்தார். விற்பனையினை சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்புர பகுதிகளை சேர்த்து மொத்தம் 11,735 மகளிர் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இதில் மொத்தம் 1,49,552 மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தும் விதமாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான விற்பனை கண்காட்சிகள், கல்லூரி சந்தைகள், உணவு திருவிழா, நடமாடும் மதி அங்காடிகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் மாவட்டத்திற்குட்பட்ட 48 இடங்களில் மதி அங்காடி சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. கன்னியாகுமரி நகராட்சிக்குட்பட்ட சுவாமிநாதபுரம் பகுதியில் ரூ.50 இலட்சம் மதிப்பில் மகளிர் குழு உறுப்பினர்கள் மூலம் மதி அனுபவ அங்காடி விற்பனை துவக்கப்பட்டுள்ளது. இந்த மதி அனுபவ அங்காடி மூலம் பழங்குடியின மக்களின் உற்பத்தி பொருட்களான நல்லமிளகு, கிராம்பு, கஸ்தூரி மஞ்சள், தேன், கன்னியாகுமரி மாவட்ட மகளிர் சுயஉதவி உறுப்பினர்களின் உற்பத்தி பொருட்களான வாழைநார் பொருட்கள், பனை ஓலை பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், சங்கு பொருட்கள், ஆயத்த ஆடைகள், உலர்மீன் வகைகள், ஊறுகாய் வகைகள், பாரம்பரிய உணவு பொருட்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட கைவினை பொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. என கூறினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மோனிகா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, கன்னியாகுமரி நகர்மன்ற தலைவர் குமரி ஸ்டீபன், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



