திருப்பூர், அக்.02:
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில், ஜோதி சுரேஷ் பாண்டே தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் சசிகாந்த், சனந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
திருநங்கைகள் குறித்து சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ள பாடல்களும் கவனம் பெற்றுள்ளன. இந்நிலையில், திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கில் ‘டோரதி’ திரைப்படம் வெளியானதை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட திருநங்கைகள் தலைவி திவ்யா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திரையரங்கு முன்பு ஒன்றுகூடி கேக் வெட்டி கொண்டாடினர்.
மேலும், ‘டோரதி’ திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும், திருநங்கைகளின் வாழ்க்கை மற்றும் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் திரைப்படம் அமைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அனைவரும் ஒன்றாக திரையரங்கில் திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தனர்.



