தருமபுரி, செப். 26:
தருமபுரியில் காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக ஆம் ஆத்மி கட்சியின் விவசாய அணி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் ஜெயபாலன் தலைமையில், தருமபுரி மாவட்ட கட்சி அலுவலகத்தில் காவிரி கள ஆய்வு பயணம் தொடங்கியது. உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராமன் கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார்.
செப்டம்பர் 26 முதல் 29-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கள ஆய்வில், ஒகேனக்கல் அடுத்த ராசிமணல் பகுதியில் தொடங்கி மேட்டூர், பவானி, கரூர், திருச்சி, கல்லணை, மயிலாடுதுறை, பூம்புகார் உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதிகளில் நீர்வளம் மற்றும் விவசாயம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில வழக்கறிஞர் அணி தேர்தல் பரப்புரை குழு உறுப்பினர் சங்கர், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெறுவதில் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். தருமபுரி மாவட்டத்தில் காவிரி நுழைந்தாலும் மக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை என்றும், டெல்டா பகுதிகளிலும் நீர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் கூறினார். கள ஆய்வின் மூலம் நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகள் அமைக்க வேண்டிய பகுதிகளை கண்டறிந்து, அதிகாரிகளிடம் தகவல்களை சேகரித்து தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மழைக்காலங்களில் கடலில் கலக்கும் நீரை சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும், காவிரி மற்றும் தென்பெண்ணையாறு பாயும் தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை என்றும் சங்கர் வலியுறுத்தினார்.



