தருமபுரி, ஆகஸ்ட் 03 –
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல்லில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் ஆடிப்பெருக்கு விழா மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சி ஒகேனக்கலில் நடைபெற்றது. விழாவிற்கு ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன், தவெக மாவட்டச் செயலாளர் சிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா வரவேற்புரையாற்றினார். தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் குத்துவிளக்கேற்றி ஆடிப்பெருக்கு விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 7.48 கோடி மதிப்பீட்டில் 23 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் பல்வேறு துறைகளில் சார்பில் 1,910 பயனாளிகளுக்கு ரூ.19.63 கோடி மதிப்பீட்டில் அரசு நல திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் 23 துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை பணி விளக்க கண்காட்சி அரங்குகளை அமைச்சர் ராஜ்குமார் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்த விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுமதி, உதவி ஆட்சியர் ஜார்ஜ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா, கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் சங்கரராமன், பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, உதவி சுற்றுலா அலுவலர் லலிஷா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், ஊராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



