குளச்சல், பிப். 27 –
வெள்ளி சந்தை அருகே ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (34). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பிரியா (32) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு நான்கரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவியிடைய கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதை தொடர்ந்து 2 பேரும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.
மணிகண்டன் வெளிநாட்டில் இருப்பதால் குழந்தை மணிகண்டனின் தாய் பராமரிப்பில் வளர்ந்து வருகிறது. இதற்கிடையே குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க கோரி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரியா புகார் அளித்தார். போலீசார் கணவன் மனைவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை என தெரிகிறது. இதனால் பிரியா கணவர் மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மணிகண்டன் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். இதனை அறிந்த பிரியா கடந்த 25ஆம் தேதி கணவர் வீட்டுக்கு சென்று கணவரிடம் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ப்ரியா கீழே கிடந்த பாட்டில் எடுத்து கணவரின் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் மணிகண்டன் மண்டை உடைந்தது.
அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இது குறித்து மணிகண்டன் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தார். போலீசார் காதல் கணவனை பாட்டிலால் தாக்கி மண்டை உடைத்த பிரியா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


