திருச்சி, ஏப்ரல் 16 –
மண்ணச்சநல்லூர் தொகுதியில் ரூ.8000 கூப்பன் விநியோகித்த நிலையில் தமக்கு தராததை கண்டித்த இளம் பெண்ணை திமுகவினர் ஆபாசமாக பேசியதால் இளம்பெண் மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 6 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
இது குறித்த விபரம் வருமாறு: திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் தொகுதியில் தாளக்குடி ஊராட்சிக்குட்பட்ட வாழக்கட்டை பகுதியில் திமுக வேட்பாளர் கதிரவனுக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் சிலர், வாக்காளர்களுக்கு நேற்று முன்தினம் ரூ.8000 மாதிரி கூப்பன் வழங்கியதாக கூறப்படுகிறது.
அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரசாந்த் மனைவி சிந்துஜா என்பவர் தனக்கும் பரிசுப் பொருள் கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தகராறு முற்றி அந்தப் இளம் பெண்ணை பரிசுப் பொருட்கள் விநியோகித்த திமுகவினர் சிலர் ஆபாசமாக திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த அப்பெண் நடந்த விவரங்களை அன்று இரவு கணவர் பிரசாந்திடம் கூறி உள்ளார். தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த சிந்துஜா, வீட்டை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு சேலையால் தூக்குப் போட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று, மனைவியை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்தார்.
இதனிடையே, அவரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிந்துஜாவின் உறவினர்கள், திருச்சி-சேலம் சாலையில் உத்தமர் கோவில் மேம்பாலத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த கொள்ளிடம் போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததைத் தொடர்ந்து மறியலை கைவிட்டனர். பின்னர் அவர்கள் கொள்ளிடம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதுதொடர்பாக சிந்துஜாவின் தாயார் இளையராணி கொடுத்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியது, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ராஜா, திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன், ரவிக்குமார், ராஜா மனைவி புஷ்பம், ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி, ராஜ்குமாரின் தாய் அங்குமணி ஆகிய 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள திமுக நிர்வாகிகள் சுரேஷ்குமார், ராஜ்குமார், ரவி மனைவி கார்த்திகா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பணியாற்றிய திமுக நிர்வாகிகளால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தற்கொலை சம்பவத்திற்கு தவெக, பாஜக, அதிமுக என பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.



