சென்னை, அக்,09:
தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மை நிலவரப்படி, இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். இதற்கிடையே, புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
மதுராந்தகத்தில் தவெக முன்னிலை
மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 27,184 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 18,379 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத் 15,893 வாக்குகளும் பெற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தி 455 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் 641 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தொகுதியில் 86.26 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பதிவான வாக்குகள் 22 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன.
தாராபுரத்தில் தவெக மீண்டும் முன்னிலை
தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா 24,047 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் பானுமதி 21,935 வாக்குகளும், திமுக வேட்பாளர் சுகன்யா 19,972 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா 1,891 வாக்குகள் பெற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ப.லட்சுமணன் 475 வாக்குகள் பெற்றுள்ளார்.
தாராபுரம் தொகுதியில் மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு 80.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 320 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், 14 மேசைகளில் 23 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. முதல் சுற்றில் அதிமுக முன்னிலையில் இருந்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் தவெக முன்னிலை பெற்றுள்ளது.
தட்டாஞ்சாவடியில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. நான்கு சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தன் 13,358 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் 4,876 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். வெற்றியைத் தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



