ஈரோடு, ஜூலை 25 –
ஈரோடு ஆப்பகூடல் சக்திநகரில் உள்ள குமரகுரு வேளாண்மைக் கல்லூரி வளாகத்தில் குமரகுரு வேளாண்மை கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அருட்செல்வர் அரங்கத்தின் திறப்பு விழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவிற்கு குமரகுரு கல்வி நிறுவனங்கள்தலைவர் டாக்டர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார் சக்தி சுகர்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மாணிக்கம், வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தாளாளர் பாலசுப்ரமணியம் , சக்தி குழும அதிகாரிகள், அலுவலர்கள், குமரகுரு வேளாண்மைக் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் அருட்செல்வர் விருது, சி. சுப்பிரமணியம் விருது மற்றும் நம்மாழ்வார் விருது ஆகிய மூன்று விருதுகள் வழங்கப்பட்டது. மேலும், அதிக கரும்பு மகசூல் பெற்ற ஒன்பது கரும்பு விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



