ஈரோடு, ஜூலை 23 –
நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் நாடு முழுவதும் மாணவர் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லி மற்றும் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள குமரன் சாலையில், தியாகி திருப்பூர் குமரன் சிலை அருகில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த அமைப்பினர் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் குண்டுகட்டாக அப்புறப்படுத்தி, இதில் ஈடுபட்ட 27 பேரையும் கைது செய்தனர்.



