நாகர்கோவில், ஜூலை 27 –
கன்னியாகுமரியை அடுத்த சாமிதோப்பு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் மகன் பிரவீன் (23). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு சென்று விட்டு, நள்ளிரவில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். நாகர்கோவிலில் அடுத்த கரியமாணிக்கபுரம் பகுதியில் பிரவீன் மோட்டார் சைக்கிளில் வரும்போது, எதிரே வந்த ஆட்டோ மீது அவரது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக் கொள்ளானது.
இதில் தூக்கி வீசப்பட்ட பிரவீனுக்கு தலை மற்றும் உடலில் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் பிரவீன் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி சென்று ஆட்டோ மீது மோதியது தெரியவந்துள்ளது. பிரவீனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


