நாகர்கோவில், ஆக. 3 –
நாகர்கோவில் அருகே உள்ள கீழமணக்குடி பகுதியை சேர்ந்தவர் பீட்டர் ஜான் மனைவி ஸ்கோலாஸ்டிகா பனியடிமை (75). இவர் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள ஒரு பெந்தேகோஸ்தே சபைக்கு செல்வதற்காக புத்தளத்திலிருந்து நாகர்கோவில் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார். வேப்ப மூடு சந்திப்பில் இறங்கி பின் அங்கிருந்து வடசேரி செல்லும் பஸ்ஸில் ஏறினார். வடசேரி பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது அவரது கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்கச் செயினை காணவில்லை. பஸ்ஸில் தேடியும் கிடைக்கவில்லை.
இவர் புத்தளத்திலிருந்து பஸ் ஏறி வேப்ப மூடு பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கிய பஸ்ஸில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இருந்துள்ளனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம பெண் கைவரிசை காட்டி உள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து கோட்டாறு காவல் நிலையத்தில புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பஸ்களில் தொடரும் இது போன்ற செயின் பறிப்பு சம்பவத்திற்கு காவல்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


