நாகர்கோவில், டிச. 15 –
குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க எஸ்.பி ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி சைபர் பிரிவு போலீசார் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
தொடர் நடவடிக்கையால் தற்போது சுமார் ஐம்பத்து எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 335 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட செல்போன்களை எஸ்பி ஸ்டாலின் உரிய நபர்களிடம் நேற்று ஒப்படைத்தார். இந்த வருடத்தில் மட்டும் சுமார் இரண்டு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,265 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த செல்போன்கள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் எஸ்பி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: பொது மக்கள் தங்களுடைய செல்போன் தொலைந்து போனால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக மனு அளிக்கவேண்டும் அல்லது Citizen Portal (https://eservices.tnpolice. gov.in) இணையதளத்திலும் தங்களது புகாரை பதிவு செய்யலாம்.
CEIR Portal (https://www. ceir.gov.in/) என்ற இணையதளத்தில் செல்போனை பிளாக் செய்யவும் செல்போனை மீட்க காவல்துறைக்கு உதவவும் முடியும். திருட்டு செல்போன்களை சட்டப்படி குற்றமாகும். உபயோகப்படுத்துவதும் விற்பனை செய்வதும், செல்போன்களை ஒருவரிடம் இருந்து 2வது முறையாக வாங்கும் பொதுமக்கள் அல்லது விற்பனையாளர்கள் அந்த செல்போன் விற்பனை செய்யும் நபருடையது தானா? என்பதை அந்த செல்போன் வாங்கப்பட்டதற்கான உரிய ரசீது ஆகியவற்றை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



