நீலகிரி, செப். 15:
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புலி தாக்குதலில் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் அச்சத்தில் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். தனித்தனி மலைக் கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மூலம் தகவல் அறிந்த பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் மாவட்டம் 3242 சி சார்பில், மாவட்ட ஆளுநர் செல்வராஜ் ஆலோசனையின் பேரில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. பேரிடர் மாவட்டத் தலைவர் கதிரவன், ஜிஎம்டி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கம் தலைமையில் பல்வேறு லயன்ஸ் சங்கங்கள் இணைந்து இந்த சேவையை மேற்கொண்டன.
இதன் ஒரு பகுதியாக கே.ஆர்.புரம், நேரு நகர், கூடலூர், கூடலூர் வெஸ்டர்ன் காட்ஸ், உதகமண்டலம், மகிழ்ச்சி உள்ளிட்ட லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மலைவாழ் மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், மசாலா பொருட்கள், பிஸ்கட், பெட்ஷீட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தேவையான உதவிகளை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். திராவிட மணி, கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன், ஓவேலி பேரூராட்சித் தலைவர் சித்ராதேவி, துணைத் தலைவர் கே. சகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு லயன்ஸ் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் பங்கேற்று மலைவாழ் மக்களுக்கு உதவிகளை வழங்கினர்.



