திருவட்டாறு, ஜூன் 22 –
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஆண்டு 2022ம் ஆண்டு ஆனி மாதம் உத்தரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால், அதை கணக்கில் கொண்டு, ஆனிமாத உத்தரம் நட்சத்திர நாளான இன்று 22-ம் தேதி வருஷாபிஷேகம் நடைபெற்றது.
108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றானதும், நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பெற்ற திருத்தலமான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் கும்பாபிஷேகத்துக்குப் பின்னர் கோவிலில் சாமிதரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து வருகிறது. இன்று கோவில் நடை திறப்பைத்தொடர்ந்து நிர்மால்ய தரிசனம் நடந்தது.
தொடர்ந்து சுவாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம் ஆகியன நடந்தது. தொடர்ந்து உதயமார்த்தாண்ட மண்டபத்தில் 25 கலசங்களுடன் சிறப்பு பூஜை நடந்தது. பூஜையை கோகுல் தந்திரி நடத்தினார். பின்னர் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ண சுவாமி, ஐயப்ப சுவாமி, குலசேகரப்பெருமாள் சன்னதியில் நவ கலச அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடந்தது.
மதியம் ஸ்ரீபலி எழுந்தருளல், ஸ்ரீபூதபலி, அன்னதானம் மாலையில் அலங்கார தீபாராதனை ஆகியன நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



