மார்த்தாண்டம், ஜூன் 26 –
திருவட்டாறு அருகே உள்ள செங்கோடி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (38). நாகர்கோவில் அருகே உள்ள ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தார். தற்போது அந்த கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள வீ த லீடர்ஸ் இயக்கத்தில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இவர் பூவன்கோடு சந்திப்பு பகுதியில் நிற்கும் போது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கண்ணன், வெங்கட், சுரேஷ் மற்றும் கண்டால் தெரியும் ஒருவர் என 4 பேர் வந்து தகராறு செய்து அவரை தாக்கி, வி தி லீடர்ஸ் இயக்கத்தில் பணியாற்ற விட மாட்டோம் எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ரஞ்சித் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருவட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணன் உட்பட நான்கு பேர் மீது விசாரித்து வருகின்றனர்.
இது போன்று பாரதிய பாஜக கட்சியை சேர்ந்த திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் திருவட்டாறு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்புகளுக்கு எதிராக அவதூறுகள் பரப்பி வந்ததை கண்டித்ததால் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஞ்சித் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், சம்பவ தினம் பைக்கில் செல்லும்போது கீழே தள்ளி வலது கால் முட்டில் மிதித்து காயம் ஏற்படுத்தியதாகவும் புகாரில் கூறியுள்ளார்.
படுகாயம் அடைந்த வெங்கட்ராமன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த புகாரின் பேரில் ரஞ்சித் மற்றும் கண்டால் தெரியும் ஒருவர் என இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அண்ணாமலை இயக்கத்தினர், பாரதிய ஜனதாவினர் இடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


