தருமபுரி, ஜூலை 31 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலமுறை ஊதியம் வழங்க கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே. தேவகி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் பெ. மகேஸ்வரி, பொருளாளர் பி. வளர்மதி, மாவட்ட நிர்வாகிகள் அனுசுயா, ஜெயா, சங்கீதா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.தெய்வானை, மாவட்ட இணை செயலாளர் மீன் முருகன், அகிலன், அமிர்தராஜ், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.காவேரி, டாக்டர் ஜியோ நிதி, காப்பாளர் கே.புகழேந்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தமிழ்நாடு அரசின் கடைநிலை ஊழியர்களாக இருக்கும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு திட்டத்தோடு இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.



