தருமபுரி, ஜூன் 26 –
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள ஏ. ஜெட்டி அள்ளி தகடூர் நகர் பகுதி சேர்ந்தவர் நஞ்சம்மாள் (45). இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருடைய தம்பி மாதேஷ் (43) லாரி டிரைவர். இவர் நஞ்சம்மாள் வீட்டருகே வசித்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டின் வெளிப்பகுதியில் அவர் மற்றும் மாதேஷ் ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைக் குறித்து உடனடியாக அதியமான் கோட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன் பெயரில் காவல் துறை கண்காணிப்பாளர் சிவராமன், இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிகுமார் மற்றும் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் கொலையுண்ட நஞ்சம்மாள், மாதேஷ் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் நடந்த வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் அழகன் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஒடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
சொத்து பிரச்சினையால் இந்த இரட்டை கொலை நடந்ததா? அல்லது நகை பறிக்கும் நோக்கத்துடன் மர்ம நபர்கள் அக்காள் – தம்பியை கொலை செய்தார்களா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து நபர்களை பிடித்து அதியமான் கோட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


