தஞ்சாவூர், ஆகஸ்ட் 14 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் இதுவரை 9.83 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கோவி செழியன் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் ஆர்சுத்திப் பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் திறந்த வெளி சேமிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேமிப்பு மையத்தை அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 3-வது போகமான கோடைப்பருவத்தில் கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் இதுவரை 3.51 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2.65 லட்சம் டன் மட்டுமே கொள் முதல் செய்யப்பட்டது. அதாவது கலந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 86 ஆயிரத்து 102 டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வருகிற 31-ம் தேதி வரை 50 ஆயிரம் டன் நெல் கூடுதலாக கொள்முதலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் இதுவரை 2.06லட்சம் விவசாயிகளிடமிருந்து 9.83 லட்சம்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ஏறத் தாழ ரூபாய் 2 ஆயிரத்து 390 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 24 கிடங்குகளில் மொத்த கொள்ளளவு 2.75 லட்சம் டன். இந்த முழு கொள்ளளவுக்கும் நெல் மற்றும் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு நெல் அமோகமாக விளைந்துள்ளதால் விவசாயிகளின் நலன் கருதியும் தரையிருப்பில் உள்ள நெல்மணிகளை உடனுக்குடன் இயக்கம் செய்வதற்காகவும் இந்த 14 ஏக்கர் நிலத்தில் 25 ஆயிரம் டன் கொள்ளளவில் திறந்த வெளி சேமிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதே போல மக்கள் பிரதிநிதிகள் மூலம் எந்தெந்த பகுதியில் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் சேமிப்பு மையங்கள் திறக்கப்படுகின்றன. கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு கூடுதலாக 20 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. எதிர் காலத்தில் எந்த இடர்பாடும் இல்லாத வகையில் முன்னேற்பாட்டுடன் நெல் கொள்முதல் செய்ய உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் தேவைப்படும் இடங்களில் நெல் உணர்த்தும் எந்திரமும் ஏற்பாடு செய்யப்படும். நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
நிகழ்ச்சியில் அன்பழகன் எம் எல் ஏ, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



