தக்கலை, செப். 18 –
குமரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா 117 பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தக்கலையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜெயசுதர்ஷன் தலைமை தாங்கினார். பத்மநாபபுரம் நகர செயலாளர் டேனியல் வரவேற்புரை ஆற்றினார். திருவட்டார் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயதாஸ், கிழக்கு ஒன்றிய செயலாளர் நிமால், மேல்புறம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஷைன் ஜோஸ், கிழக்கு ஒன்றிய செயலாளர் மனி, கிள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜார்ஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் எட்வின்ராஜ்குமார், நகர செயலாளர்கள் அழகுராஜா, ஆன்றோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அமைப்பு செயலாளரும், குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான சின்னத்துரை கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசியதாவது: ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வீடுகளுக்கு வரி உயர்த்தப்பட்டது. குடிநீர் கட்டணம், பால் விலை, மின் கட்டணம் ஆகியவை அதிக அளவில் உயர்த்தப்பட்டது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் கூட சத்தம் இல்லாமல் உயர்த்தப்பட்டது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். ஏதோ எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. இந்த அரசு விடியாத அரசாக உள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு கடனுக்கு மேல் கடன் பெற்று 10 லட்சம் கோடி கடனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மாதம் தோறும் கோடிக்கணக்காக ருபாய் வட்டி மட்டும் செலுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு பொது மக்களும் கடனாளியாக மாறிக் கொண்டிருக்கிறோம். நமது வரி பணம் இந்த திமுக அரசு பெற்ற கடனுக்கு வட்டியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த அளவுக்கு கடன் பெற்று என்ன செய்தார்கள் என்றால் இந்த கேள்விக்கு எந்த பதிலும் கிடையாது. 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டம் என்ற பெருமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளது. வீட்டுக்கு வீடு படித்தவர்கள் பட்டம் பெற்றவர்கள் உள்ளனர் முன்னாள் முதல்வர் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த 7.5 சதவீத திட்டத்தின் கீழ் இந்த மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் எம்.பி.பி எஸ் படித்து வருகின்றனர். ஆனால் விடியாத திமுக அரசு இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தொலைநோக்கு பார்வையில் ஏதாவது திட்டங்கள் கொண்டு வந்தார்களா என்றால் இல்லவே இல்லை. ஒரு ஐடி பார்க் கொண்டு வரலாம்.
உயர்தரமான ரப்பர் இந்த மாவட்டத்தில் தான் கிடைக்கிறது ரப்பர் தொழிற்சாலை கொண்டு வரலாம். தேன் கிடைக்கிறது தேன் முழுவதும் கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்யலாம் ஆனால் எதுவும் செய்யவில்லை. எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த மாவட்டத்தில் தாரளமாக மீன்கள் அதிக அளவு கிடைக்கிறது. மீனவர்களுக்காக மீனை பதப்படுத்தி ஏற்றுமதி செய்ய ஏதாவது முயற்சி இந்த திமுக விடியல் அரசு நடவடிக்கை எடுத்தார்களா? இல்லை எதுவும் செய்யவில்லை. பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட தொகுதி எம்எல்ஏ பால்வளத்துறை அமைச்சர் ஒரு முறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றார். ஆனால் அவர் இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு இந்த அமைச்சர் திட்டங்கள் ஏதாவது கொண்டு வந்தாரா? இல்லை. இந்த தொகுதிக்கு உட்பட்ட மலையோர கிராமங்களில் குறைந்தபட்சம் அடிப்படை வசதிகள் கூட செய்யப்படவில்லை.
இந்த மாவட்டத்தில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் எம்.எல் ஏக்கள் உள்ளனனர். எம்.பியும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தான். இவர்கள் தேர்தல் நேரத்தில் தான் மக்களை சந்திப்பார்கள் இவர்கள் இந்த மாவட்டத்திற்கு ஏதாவது நல்ல திட்டங்கள் கொண்டு வந்தார்களா? எம்.எல்.ஏ, எம்.பி நிதியில் செய்தது மட்டும் தான் உள்ளது. விஜய் வசந்த் எம்.பி மத்திய அரசிடம் வாதாடி பேராடி ஏதாவது திட்டங்கள் கொண்டு வந்தாரா? எதுவும் இல்லை. காவல்கிணறு இருந்து சென்னை வரை நான்குவழி சாலை உள்ளது ஆனால் களியாக்காவிளையிலிருந்து காவல்கிணறு வரை பணி முடிந்ததாக இல்லை. இதற்க்கு ஒரு முடிவே இல்லை. இதைபோல் இரட்டை ரயில் பாதை திட்டம் திருவனந்தபுரத்தில் இருந்து பாறசாலை வரை இரட்டை ரயில் பாதை திட்டம் ஏறக்குறைய பணி முடிந்துவிட்டது. ஆனால் பாறசாலையில் இருந்து நாகர்கோவில் வரை நடக்கிறது நடந்து கொண்டே தான் இருக்கிறது. இது குறித்து விஜய் வசந்த் எம்.பிக்கு எந்த கவலையும் இல்லை.
அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் பொது தேர்தல் வர உள்ளது. மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள். தேர்தல் தேதி அறிவிக்கும் வரை தான் இந்த விடியாத திமுக அரசு பொது மக்களை ஏமாற்ற உங்கள் ஊரில் ஸ்டாலின் திட்டத்தை போன்று பல ஏமாற்று திட்டங்களை கொண்டு வருவார்கள். நீங்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அதிமுக கூட்டனி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. அதிமுக தனிப் பெரும்பாண்மையுடன் ஆட்சியை பிடித்து எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவது உறுதி. எனவே குமரி மாவட்ட மக்களை சிந்தித்து யோசித்து வாக்கு அளியுங்கள். அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்தை பொற்காலமாக மாற்றலாம். தொலைநோக்கு பார்வையில் நல்ல திட்டங்களை கொண்டு வருவோம்.
மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



