குளச்சல், செப். 5 –
குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் நெல்சன் (50). கன்னியாகுமரி குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் தொகுப்பு ஊதியத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். சம்பவ தினம் இவர் கடற்கரை பகுதியில் காலி பாட்டில்கள் பொறுக்க சென்றுள்ளார். அப்போது கண்டால் தெரியும் 2 வாலிபர்கள் நெல்சனிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர். இதை அடுத்து அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியால் நெல்சனை குத்தினார். படுகாயம் அடைந்த நெல்சனை அக்கம் பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இது குறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியவர்கள் விட்டு சென்ற பைக்கை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்களில் ஒருவன் மிடாலக்காடு பகுதியை சேர்ந்த அஸ்வின் (22) என்பதும் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியை கடத்தி நகைக்காக கொலை செய்தவர் என்பதும் தெரிய வந்தது. சேலம் சிறையில் அடைக்கப்பட்ட அஸ்வின் வெளியே வந்ததும் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடி உள்ளார்.
இதனால் பள்ளியாடி பகுதியை சேர்ந்த நண்பர் செர்ஜின் என்பவருடன் கூட்டுச் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரண்டு பேரும் இன்று நெல்சனிடம் பணம் கேட்டு தகராறு செய்ததில் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியதும் தெரிந்தது.
இவர்கள் செல்போன் சிக்னல் மூலம் இரண்டு பேரையும் குளச்சல் போலீசார் இன்று கைது செய்தனர். அவர்கள் இரணியல் கோர்ட்டில் ஆயர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.



