நாகர்கோவில், செப்.23:
கிள்ளியூர் வட்டம் கருங்கல் மூசாரி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் சிறு விளையாட்டு மைதான கட்டுமானப் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடைபெற்ற ஆய்வின்போது, மைதானத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
விளையாட்டு வீரர்களுக்கான அடிப்படை வசதிகளுடன் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க ஒப்பந்ததாரருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நடைபயிற்சிக்கான பாதை அமைக்கவும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டது. கிராமப்புற மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவித்து, மாநில மற்றும் தேசிய அளவில் சாதனையாளர்களாக உருவாக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.



