நாகர்கோவில், ஜூலை 27 –
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இரவு பகல் சாரை சாரையாக செல்லும் கனிம வள லாரிகளால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்தனர். விபத்துகளால் நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இந்த நிலையில் குமரி மாவட்ட நிர்வாகம் கனிம வள லாரிகளுக்கு தடை விதித்துள்ளது. இதனால் தங்களுடைய வாழ்வாதார பாதிக்கப்படுவதாகவும், இந்த தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி கனிமவள லாரி ஓட்டுனர் சங்கம் சார்பில் தமிழக கேரள எல்லை பகுதியில் இருந்து தங்கள் லாரிகளை ஊர்வலமாக கொண்டு சென்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லாரிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
இதை ஒட்டி தமிழக கேரள எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் பாதுகாப்புக்காக கூடுதலாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இது போன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே போராட்டம் நடத்த லாரிகளோடு தமிழக கேரள எல்லையில் கேரளா பகுதியில் லாரிகளுடன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் குவிந்தனர்.
தொடர்ந்து எல்லை பகுதியில் இஞ்சி விளை லாரி குடோனில் நிறுத்தி வைத்திருந்த லாரிகளை எடுக்க விடாமல் தமிழக கேரள போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
தொடர்ந்து திடீரென லாரியோடு களியக்காவிளையில் இருந்து நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் திடீரென நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி சாலை மறியல் போராட்டம் செய்தனர். இதில் ஆத்திரமடைந்த கேரள போலீசார் போராட்டம் நடத்தியவர்களையும் தமிழக செய்தியாளர்களையும் ஒருமையில் திட்டி அனைவரையும் அங்கிருந்து துரத்தினர்.
தொடர்ந்து போராட்டக்காரர்கள் தமிழக கேரள எல்லை பகுதி களியக்காவிளை சோதனை சாவடியில் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது தமிழக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சங்க நிர்வாகிகளை எஸ்பி அலுவலகத்தில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்படுத்தலாம் என்று உறுதி கூறியதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.



