நாகர்கோவில், மே 14 –
நாகர்கோவில் அருகே உள்ள என்.ஜி.ஓ காலனி பகுதியை சேர்ந்தவர் அன்பையா. இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 9 மணி அளவில் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நள்ளிரவு சுமார் 1:30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்ம நபர்கள் நகைக்கடையை கம்பியால் அடித்து உடைத்து உள்ளனர். அந்த சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் அது பற்றி உடனடியாக போலீஸ் கட்டுப்பாடு அறைக்கும், சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.
இதை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கொள்ளையர்கள் நகைக்கடையின் உள்ளே சென்று நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர். அவற்றை அள்ளிக்கொண்டு வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். தன்னுடைய கடையை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் குறித்து அன்பையாவும் சம்பவ இடம் வந்தார்.
சுசீந்திரம் போலீசார் நகைக் கடையில் சென்று பார்வையிட்டபோது கடையில் இருந்த 70 பவுன் தங்க நகைகள் மற்றும் 10 கிலோ வெள்ளி கொள்ளை போய் இருந்ததும், அவற்றின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. தப்பி சென்ற கொள்ளையர்களை பிடிக்க மாவட்டம் முழுவதும் போலீசார் உடனடியாக உஷார் படுத்தப்பட்டனர்.
பின்னர் கடையில் பதிந்திருந்த கைரேகை மற்றும் தடயங்களை போலீசார் சேகரித்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணுவதற்காக நகைக்கடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த வீடியோக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது 4 வாலிபர்கள் 2 மோட்டார் சைக்கிளில் வந்து கடையை உடைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அவர்களில் ஒருவர் மட்டுமே முகக்கவசம் அணிந்திருந்தார். மற்ற 3 பேரும் முக கவசம் அணியாமல் இருந்ததால் அவர்களின் முகம் நகை கடையில் இருந்த ஒரு கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் நகரில் மிக முக்கியமான பகுதியில் மெயின் சாலை அமைந்துள்ள நகைக்கடையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.



