தென்காசி, ஜூலை 23 –
உலக இரத்தக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரத்தக் கொடையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பிறரின் உயிரைக் காக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டு வரும் கொடையாளர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக குருதிக்கொடை அளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் தென்காசி சார் ஆட்சியர் வைஷ்ணவி பால் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு இரத்தக் கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் சான்றிதழ்களை வழங்கிய சார் ஆட்சியர் பேசுகையில் இரத்தம் கொடுத்து பிறரைக் காப்பது என்பது ஒரு மிக உயர்ந்த சேவை மனப்பான்மையாகும். இத்தகைய சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதற்கு நல் மனமும் சிறிது நேரமும் இருந்தால் மட்டுமே போதுமானது. இதன் மூலம் ஆபத்தான சூழலில் இருக்கும் ஏராளமான பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் அதிக முறை இரத்த தானம் செய்த காவலர் கார்த்திக் பாண்டியன், பத்திரிக்கை நிருபர் குற்றால பெருமாளுக்கு சிறந்த இரத்த கொடையாளருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஏராளமான ரத்தக் கொடையாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.



