நாகர்கோவில், ஜூலை 16 –
நாகர்கோவில் வடசேரி, ஆசாரி வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ் (33). திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (28). பிஇ பட்டதாரி. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு லட்சுமி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் வடசேரி போலீசார் விசாரணை நடத்தி, லட்சுமியின் உடலை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து லட்சுமியின் தந்தை முருகன் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். புகாரில் அவர் கூறியிருப்பதாவது: எனது மகளை கடந்த 13.12.2021 அன்று சிவப்பிரகாசுக்கு திருமணம் செய்து கொடுத்தேன். அவர்களுக்கு இரண்டே முக்கால் வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் செய்து கொடுத்ததில் இருந்து எனது மகளின் கணவரின் தாயார் சாந்தி என்பவர் எனது மகளை தொடர்ந்து கொடுமை செய்து வந்தார். இதற்கு லட்சுமியின் மாமனார் துரை மற்றும் கணவர் சிவ பிரகாஷ் உடந்தையாக இருந்துள்ளனர்.
ஏற்கெனவே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எனது மகள் என்னிடம் கணவரின் தாய் டார்ச்சர் செய்வதாக கூறி எனது வீட்டிற்கு வந்தார். பின்னர் சமாதானம் பேசி கணவர் வீட்டில் கொண்டு வந்து விட்டோம். இந்த நிலையில் கடந்த 14ம் தேதி இரவு 7.30 மணி அளவில் எனது மகள் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். நாங்கள் சென்று பார்த்தபோது, எனது மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு எந்த தடயமும் இல்லை. எனது மகளின் உடலை எனது மருமகன் மடியில் வைத்து அழுது கொண்டிருந்தார். இதனால் எங்களுக்கு மகள் சாவில் பல சந்தேகம் எழுந்துள்ளது.
உரிய விசாரணை நடத்தி எனது மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வடசேரி போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக மாமியார் சாந்தி, மாமனார் துரை, கணவர் சிவப்பிரகாஷ் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



