கீரிப்பாறை ஜன 02
கன்னியாகுமரி மாவட்டம், கீரிப்பாறையில் செயல்பட்டு வரும் அரசு ரப்பர் கழக தொழிற்கூடத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்திய தொழிலாளர்கள் அரசு காப்பீடு திட்டம் (E.S.I.E) ஏற்படுத்தி தர வலியுறுத்தி தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க இத்திட்டத்தை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.
கீரிப்பாறையில் அரசு ரப்பர் கழக தொழிற்கூடத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், இந்திய தொழிலாளர்கள் அரசு காப்பீடு திட்டம் (E.S.I.E) ஏற்படுத்தி தர வேண்டி தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். 25-11-2024 அன்று இதற்காகவும், பல்வேறு கோரிக்கைகளுக்காகவும் அடையாள வேலை நிறுத்த போராட்டம் மற்றும் உண்ணா விரதப் போராட்டம் தொழிற்கூட வாயிற் முன்பு நடைபெற்றது. 26-11-2024 முதல் நாள்தோறும் இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை இரண்டு தொழிலாளர்கள் வீதம் உண்ணா விரதப் போராட்டம் மேற்கொள்வார்கள் என்று அனைத்து தொழிற்கூட தொழிலாளர்கள் அறிவித்ததற்கு இணங்க தொடர்ந்து உண்ணா விரதப் போராட்டம் நடந்து வருகிறது. இதன் பொருட்டு அரசு ரப்பர் கழக தொழிற்கூடத்தில் பணிபுரியும் தொழிலாளர்களால் நடைபெற்று வரும் உண்ணா விரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள தொழிலாளர்களை தளவாய்சுந்தரம் நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளையும், பிற கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
பின்னர் அவர் தொழிற்கூடத்திற்கு சென்று அங்கு செயல்பட்டு வரும் ஒவ்வொரு பிரிவினையும் பார்வையிட்டார். குறிப்பாக ரப்பர் பால் மற்றும் ரப்பர் கழிவு பால் சுத்திகரிக்கின்ற முறைகளை தொழிலாளர்கள் விளக்கி கூறினார்கள்.
உடன் தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சாந்தினி பகவதியப்பன், தோவாளை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்.சுந்தர்நாத், ஒன்றிய கவுன்சிலர் மேரிஜாய், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் அஜன்ஹெலிடர், சந்திரசேகர் ஆகியோர் இருந்தனர்.