நித்திரவிளை , ஜன-28
கிராத்தூர் அருகே மருதங்கா விளை என்ற இடத்தை சேர்ந்தவர் அகிலா (36). இவருக்கு திருமணம் ஆகி 16 வருடங்கள் ஆகிறது. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு கணவர் பிரிந்து சென்று விட்டார். இவருக்கு டோனிகா (15), டேனிகா (9) என்ற பெண் குழந்தைகள் உண்டு. அகிலாவும் 2 பெண் பிள்ளைகளும் அந்தப் பகுதியில் ஆஸ்பெட் டாஸ் கூரை வீட்டில் தங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை சுமார் 5 : 30 மணி அளவில் அகிலா தனக்குத்தானே உடம்பில் தீ வைத்துள்ளார். இதில் தீ எரிந்து பிள்ளைகள் மீதும் பிடித்துள்ளது. உடனே பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே ஓடினர். இதை பார்த்த பொதுமக்கள் கொல்லங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வீட்டின் உள்ளே இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமானது. இதில் உடல் வெந்த நிலையில் வீட்டினுள் கிடந்த அகிலாவையும், காயமடைந்த பிள்ளைகளையும் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து 3 பேரும் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.