நாகர்கோவில், ஜூலை -29,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக தலைமை பணிமனை முன்பு கன்னியாகுமரி மாவட்ட பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (பிஎம்எஸ்) சார்பில் சங்கத் தலைவர் நடேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 10 ஆண்டுகளாக காலியாக உள்ள பணியிடங்களில் வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது நேரடி தேர்வின் மூலம் நியமனம் செய்யாமல் ஒப்பந்த முறையில் ஓட்டுனர் நடத்துனர்களை நியமனம் செய்து தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு போக்குவரத்து கழகங்களை தாரைவார்க்கும் தமிழக அரசை கண்டித்தும், நிரந்தர பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமனம் செய்ய முயற்சிப்பது இளைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்வதும் தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிரானதாகும் நிரந்தர பணியிடங்களில் சட்டத்தை மீறி ஒப்பந்த முறையை அமல்படுத்த முயற்சிப்பது தமிழகத்தில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் சமநீதி , சமூகநீதி, இட ஒதுக்கீடு கொண்ட கொள்கைகளை குழி தோண்டி புதைப்பதாகும் தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டிய முன்மாதிரியான வேலை அளிப்பவராக போக்குவரத்துக் கழகங்கள் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தொழிலாளர்களை நியமனம் செய்யாமல் லாப நோக்கில் செயல்பட முயற்சிப்பது போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்ட சேவை மனப்பான்மை மீறும் நடவடிக்கையாகும் , மேலும் ஒப்பந்த முறையில் பணியாளர்கள் நியமனம் என்பது தொழிலாளர்களின் நிரந்தர வேலை வாய்ப்பை பறிப்பது தனியார் நிறுவனங்கள் லாபம் அடையும் நோக்கத்தை வலுப்படுத்துவதாகும். எனவே பொதுத்துறை நிறுவனங்களான போக்குவரத்து கழகங்களில் அரசின் சட்ட திட்டங்களை தொடர்ந்து கடைபிடிக்கும் நடைமுறைகளையும் முறையாக பின்பற்றி வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது வெளிப்படையான நேரடி தேர்வின் மூலம் ஓட்டுனர் நடத்துனர்களை நியமனம் செய்திட வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ராணி தோட்டம் கிளை தலைவர்கள் கணேஷ்,மோகன் கோபகுமார் மற்றும் மத்திய தொழிற் கூடம் கிளை தலைவர் ராஜசேகர் ,சங்கத் தலைவர் நடேசன் முன்னிலையில், துணைத் தலைவர் அற்புத ராஜ் செந்தில்குமார், துணைப் பொதுச் செயலாளர் விஜயகோபாலன்,பேரவைச் செயலாளர் சதீஷ்குமார், சங்க பொதுச் செயலாளர் கிரிஷ்,ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட பொறுப்பாளர் குமாரதாஸ் சிறப்புரையாற்றினார், அலுவலக செயலாளர் ஜெயக்குமார் மற்றும் சங்க செயற்குழு உறுப்பினர் ஆண்டியா பிள்ளை நன்றியுரை நிகழ்த்தினார்.